×

பொதிமூடைகளா பள்ளி மாணவர்கள்

தேனி, ஜூன் 7: தேனியில் பொதிமூடைகளை போல பள்ளி மாணவர்களை ஆட்டோவில் திணித்து செல்வதை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டன. இதயடுத்து, பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் வழக்கம்போல பரபரப்புடன் சென்று வருகின்றனர். தேனி நகரில் உள்ள பிரபல பள்ளிகளில் தேனி மட்டுமல்லாமல் தேனியை சுற்றியுள்ள அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, வீரபாண்டி, பூதிப்புரம், அரப்படித்தேவன்பட்டி, க.விலக்கு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தேனி வந்து பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியிருந்தாலும், மிகக் குறைவான பேருந்துகளே உள்ளதால் அனைத்து மாணவர்களும் பஸ்களில் செல்ல முடிவதில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் ஷேர் ஆட்டோக்களிலும், சாதாரண ஆட்டோக்களிலும் ஏறி பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளின் தேவையை கணக்கு வைத்து பல ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் சுயலாபத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோக்களில் பொதிமூடைகளை போல திணித்து ஏற்றி சென்று வருகின்றனர். இத்தகைய ஆட்டோக்கள் சிறிய விபத்துக்கு உள்ளாகும்போது கூட பெரியளவில் மாணவ, மாணவியரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி நகர சாலையில் தினமும் அன்றாட நிகழ்வாக செல்லும் இத்தகைய ஆட்டோக்களை பார்க்கும் போக்குவரத்து போலீசாரோ, வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ அத்துமீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. பொதிமூடைகளை போல மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிர்பலி நிகழ்வதற்கு முன்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அத்துமீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Puppet maths students ,
× RELATED தேனி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களை சீரமைக்க பயணிகள் கோரிக்கை